நள்ளிரவில் விவசாயிகள் பேரணியால் பரபரப்பு

டெல்லியில் நள்ளிரவில் விவசாயிகள் பேரணியாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், மின்கட்டணத்தில் சலுகை செய்ய வேண்டும், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரித்துவாரில் இருந்து கடந்த 23-ம் தேதி டெல்லிக்கு ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக புறப்பட்டனர். டெல்லி-உத்தரப் பிரதேசம் தேசிய நெடுஞ்சாலையில் காசியாபாத்தில் விவசாயிகள் நுழைய முயன்றபோது, போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

இதனால், விவசாயிகள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்றப்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். தடி அடியும் நடத்திக் கூட்டத்தை விரட்டி அடித்தனர். இதன் காரணமாக, காசியாபாத் நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

விவசாயிகளின் பிரச்சனைகளை இந்திய அரசிடம் தெரிவிக்காமல், வேறு எந்த நாட்டு அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே இரவு வரை அமைதியாக இருந்த விவசாயிகள், நள்ளிரவைத் தாண்டிய நிலையில், சுமார் 30 ஆயிரம் விவசாயிகள், வாகனங்களில், தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியாக வந்தனர். டெல்லி, ராஜ்காட் அருகே, விவசாயிகள் தலைவர் சவுத்ரி சரண் சிங்கின் நினைவகத்துக்குச் சென்று, போராட்டம் நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டனர். விவசாயிகளின் பேரணியால், தலைநகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

Exit mobile version