தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் இலங்கையை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக்கடல் பகுதியில் வரும் 6 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இதனால் 6,7,8 ஆகிய தேதிகளில் குமரி, தென் கேரளா மற்றும் மத்திய கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

ஏற்கனவே, கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் 5 ஆம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Exit mobile version