திருவண்ணாமலையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போஸ்கோ சட்டத்தில் கைது

திருவண்ணாமலை அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தில் அரசு உயர் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி பத்தாம் வகுப்பு கணித ஆசிரியராக இருப்பவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணன்.

இவர் மேல்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி 5 நாட்கள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கவே, மாணவியை பெற்றோர் விசாரித்தனர். அப்போது, தனக்கு ஆசிரியர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பள்ளிக்கு சென்று ஆசிரியர் கண்ணனை விசாரிக்க முற்பட்டனர். ஒரு கட்டத்தில் உறவினர்கள் திரண்டு வகுப்பறைக்குள் சென்று ஆசிரியரை சரமாரியாகத் தாக்கினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் கண்ணனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். ஆசிரியரை தாக்கிய 13 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

Exit mobile version