திமுக நிர்வாகிகள் மோதலால் மு.க.ஸ்டாலினுக்கு புதிய சிக்கல்

திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவாவுக்கும், அக்கட்சியின் தலைமைக் கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானுக்கும் இடையே வெடித்துள்ள மோதல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 96. இதனை பார்த்துள்ள திருச்சி சிவா, தமது முகநூல் பக்கத்தில் 96 படத்தை வெகுவாக பாராட்டி எழுதியுள்ளார். தம் வாழ்நாளில் இப்படி ஒரு திரைப்படத்தை பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பதில் அளித்துள்ள திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான சூர்யா வெற்றிக்கொண்டான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 96 படத்திற்காக இவ்வளவு பேசும் திருச்சி சிவா, திமுகவின் பேச்சாளர்களின் எதிர்காலத்திற்காக கொஞ்சமாவது பேசியிருக்கலாம் என்று கூறியுள்ளர். திமுக தலைவரின் பெயரை சிறுவயதில் இருந்தே உச்சரித்தவர்களுக்கு, கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வாங்கி தராதது வருத்தமளிப்பதாக இடித்துரைத்துள்ளார். இவ்விருவரின் கருத்துக்களை அடுத்து முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் திமுகவினர் பலரும் திருச்சி சிவாவுக்கு எதிராக எழுதி வருகின்றனர். ஒருபுறம் சிசிடிவி காட்சிக்களால் தினமும் சிக்கல் அனுபவித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மூத்த தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் புதிய தலைவலியை உண்டாக்கி உள்ளது.

Exit mobile version