டேவிஸ் கோப்பை டென்னிஸ் – இந்தியா, செர்பியா மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் உலக குரூப் பிளே-ஆப் சுற்று ஆட்டத்தில் இந்தியா-செர்பியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் செர்பியாவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இன்று நடைபெறும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 135-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் ராம்குமார், 86-வது இடத்தில் உள்ள செர்பியா வீரர் லாஸ்லோ ஜெரோவை சந்திக்கிறார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 162-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், 56-ம் நிலை வீரரான செர்பியாவின் துசான் லாஜோவிக்குடன் மோதுகிறார்.

நாளை நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, செர்பியாவின் நிகோலா மிலோஜெவிக்-டேனிலோ பெட்ரோவிக் இணையை எதிர்கொள்கிறது. நாளை மறுநாள் நடைபெறும் மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் ராம்குமார், துசான் லாஜோவிக்கையும், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், லாஸ்லோ ஜெரோவையும் சந்திக்கின்றனர்.

செர்பியா அணியில் சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான ஜோகோவிச் இடம் பெறாததால் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. அதேநேரத்தில் காயம் அடைந்த யுகி பாம்ப்ரி இந்திய அணியில் இடம் பெறாதது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

களிமண் தரையில் நடைபெறும் இந்த போட்டியில் நமது அணியில் யுகி பாம்ப்ரி இடம் பெறாததால் பெரிய பின்னடைவு எதுவும் இல்லை என இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீஷன் அலி கருத்து தெரிவித்துள்ளார்.

நமது மற்ற வீரர்களை விட யுகி பாம்ப்ரி தரவரிசையில் உயர்ந்தவர் என்றாலும், களிமண் தரையிலான போட்டியில் அவர் அதிகமாக விளையாடியது இல்லை. ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் ஐரோப்பியாவில் களிமண் தரை ஆடுகளங்களில் பயிற்சி பெற்றுள்ளனர். அந்த அனுபவத்தை இந்த போட்டியில் அவர்கள் பயன்படுத்துவார்கள் என பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version