டெங்குவை ஒழிக்க அதிரடி ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

 டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூரில் வீடு வீடாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அதிகளவில் காணப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துரித நடவடிக்கை எடுக்கப்பட்டதால், டெங்கு பாதிப்பு படிபடியாக குறைந்தது.

ஆனால், தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தூய்மைப் பணிகளை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். குறிப்பாக, திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, வீடு வீடாக சென்று டெங்கு நோய் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, நல்ல தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் மகேஸ்வரி பொதுமக்களிடம் அறிவுறுத்தினார்.

இதை கடைபிடிக்க தவறினால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிலரிடம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்தார். இதனிடையே, மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலரும், ஒத்துழைப்பு அளித்து, தங்களது வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருந்தனர். தொடர்ந்து சுற்றுப்புற தூய்மையை பாதுகாப்பதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் உறுதி அளித்தனர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 72 பேர், மர்ம காய்ச்சலுக்கான அறிகுறிகளுடன் காணப்பட்டதாகவும், திருவள்ளூர் பகுதியில் டெங்கு அறிகுறியுடன் இருந்த 3 பேர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமானதாகவும் கூறினார்.

மேலும், அவரவர் வீட்டின் அருகே உள்ள குப்பைகளை சுத்தம் செய்ய மக்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். மேலும், வீட்டைச் சுற்றி சுற்றுப்புற சூழலை காக்க தவறினால், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இது வரை 72 ஆயிரம் ரூபாய் பொதுமக்களிடமிருந்து, அபராதமாக வசூலித்திருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன், மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்  மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

 

Exit mobile version