சென்னையில் 205 இடங்கள் தாழ்வானவை!

வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 205 இடங்கள் தாழ்வானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சென்னையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 205 இடங்கள் தாழ்வானவை என்று கண்டறியப்பட்டு, முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 1077 என்ற எண்ணிலும், மாநகராட்சிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை முழுவதும் கண்காணிப்பாளர்கள் அலுவலர்களின் செல்போன் எண்களும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version