சென்னையில் விரைவில் மின்சார பேருந்துகள்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்குவது தொடர்பாக வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதாக தெரிவித்தார். விரைவில் மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். சென்னையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் 4 நாட்கள் முகாமிட்டு, எந்தெந்த வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது என்றும், அதற்கான டிரான்ஸ்பார்மர் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்தார். இந்த வகை பேருந்துகளை ஒருமுறை சார்ஜ் செய்தால், 240 கிலோமீட்டர் தூரத்தை 54 பயணிகளோடு பயணிக்கலாம் என்றும், ஆனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தூரம் குறையும் என்றும் அவர் கூறினார். அண்மையில் 515 புதிய பேருந்துகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் மீண்டும் 500 புதிய பேருந்துகள் தொடங்கிப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் குறிப்பிட்டார். அதனைத்தொடர்ந்து, மேலும் 4 ஆயிரம் பேருந்துகள் படிப்படியாக இயக்க வழிவகை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version