வழக்கமான புராண, இதிகாசங்களை மையப்படுத்தி படங்கள் எடுக்கும் மணிரத்னம், இந்தமுறை கையில் எடுத்திருப்பதும் கிட்டத்தட்ட அத்தகைய ஒரு கதைக்களனே. அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் மூன்று மகன்கள், அவர்களுக்கு இடையிலான மோதல். இதுதான் செக்கக் சிவந்த வானத்தின் மைய இழை.
இத்திரைப்படத்தினை ஒரு சதுரமாக உருவகம் செய்தால், அதன் நான் முனைகளாக அரவிந்த் சுவாமி, அருண் விஜய், சிம்பு மற்றும் விஜய் சேதுபதி.
ஒரு டானாக காட்டப்படுகிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அவர் என்ன மாதிரியான தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்பதை காட்டவில்லை. போகிறபோக்கில் அமைச்சர்களுக்கு பினாமியாக இருந்தவர் என்று ஒருவரியில் அவரை கடந்து செல்கிறார்கள்.
பிரகாஷ் ராஜின் இடத்திற்கு வரத்துடிக்கும் மகன்களும், அதில் குளிர்காய துடிக்கும் போட்டி டானாக தியாகராஜனும் இருக்கிறார்கள்.
கதைக்களம் ஒரு இருண்ட வானம் என்றால், அதில் முக்கிய கதாபாத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஜொலிக்கிறார்கள். ஆனால் ஒரு எரிநட்சத்திரமாய் மின்னி மறைவது விஜய் சேதுபதி தான். அவர் வரக்கூடிய காட்சிகளும், வசனங்களும் இக்காலகட்டத்தின் ஒரு முக்கிய நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் விதமாக உள்ளது.
பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோருக்கு ஸ்பூன் அளவிலும், ஜோதிகாவுக்கு சற்றே பெரிய ஸ்பூன் அளவிலும் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பாடல்களை வெற்றிபெறச் செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான் இம்முறை பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக பிரகாஷ் ராஜ், ஜெயசுதா பேசிக்கொள்ளும் காட்சியில் நமது இதயநாளங்களை சுண்டி எழுப்புகிறார்.
ஒளிப்பதிவுக்கு மீண்டும் ஒருமுறை பாடம் எடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். கோவா, செர்பியா, ஆந்திரா, சென்னை இந்த இடங்களை வேறொரு கோணத்தில் காட்டி அசத்தியுள்ளார். அதிதி ராவை பார்க்க அரவிந்த் சுவாமி படியேறி வரும் காட்சி, உறவின் நெருக்கத்தை ஒளிப்பதிவின் மூலமே காட்டி வகுப்பெடுத்துள்ளார்.
முதல்பாதியில் விறுவிறுப்பு, பிற்பாதியில் சற்று தொய்வு. எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் கொஞ்சம் கவனத்திருக்கலாம் என்பது திரையரங்கின் இருக்கையில் நெளிபவர்கள் மூலம் உணர முடிகிறது.
வாழ்க்கையில் பெரிதென நினைக்கும் திருமணத்தை மணிரத்னம் தனது படங்களில் கையாளும் விதமே அலாதியானது. போகிற போக்கில் திருமண சடங்குகளை காட்டுவது அவர் பாணி. இந்தபடமும் அதற்கு விதிவிலக்கல்ல.
படம் நெடுகிலும் ஆண்கள் புகைத்தவண்ணம் இருக்கிறார்கள். 33 சதவித இடஒதுக்கீடு போல பெண் கதாபாத்திரம் ஒன்றும் புகைப்பது போல் வைத்துள்ளார். திருமணத்திற்கான பிறகான உறவு என்பது காலம்காலமாக பாவமாக பார்க்கப்படும் சூழலில், அது தனிமனித விருப்பு வெறுப்பு சார்ந்தது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார் மணிரத்னம்.
மொத்தத்தில் அதிகார மோதலில் சிந்திய ரத்தம் தான் செக்கக் சிவந்த வானம்.
====