சிறைகளில் உள்ள மருத்துவ விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைகளில் மரணம் அடையும் கைதிகளின், உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, தமிழகத்தில் உள்ள சிறைகளில் 134 கைதிகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவர்களில் 109 பேர் முதுமையின் காரணமாகவும், 22 பேர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் பரிசீலித்த நீதிபதிகள், முதுமை காரணமாக இறந்ததாகக் கூறப்பட்ட 109 பேரும், சிறைக்குள் இறந்தார்களா அல்லது சிறைக்கு வெளியில் இறந்தார்களா என்ற விபரங்களை தெரிவிக்கவில்லை எனவும், சிறையில் உள்ள மருத்துவ வசதிகள் குறித்த விவரங்களையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Exit mobile version