சிங்கங்களின் கடைசி கர்ஜனை – கிர் காட்டில் நடப்பது என்ன?

 

காட்டுக்கு ராஜா யார் என்று குழந்தைகளிடம் கேட்டால் கூட உருட்டும் விழிகளால் பதில் சொல்லும் சிங்கம் என்று. ஆனால் இன்று இந்தியாவில் கவலைக்குரிய ஒரு ஜீவனாக சிங்கங்கள் மாறிவிட்டன. ஆம், கடந்த 20 நாட்களில் மட்டும் 23 ஆசிய சிங்கங்கள் உயிரிழந்து விட்டன. ஒட்டுமொத்த வனவிலங்கு ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ள இந்த அகால மரணங்களுக்கு பின்னால் உள்ள விஷயங்களை அறிந்து கொள்வோம்..

இந்தியாவின் மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்று, குறிப்பாக சிங்கங்களுக்கான புகலிடம் குஜராத்தின் கிர் காடுகள் ஆகும். 1400 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் இந்த காடுகள் தான், ஆசிய சிங்கங்களின் கோட்டை.

2015-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கு, 523 ஆசிய சிங்கங்கள் இருந்தன. இதில் 109 ஆண் சிங்கங்களும், 201 பெண் சிங்கங்களும், 213 சிங்க குட்டிகளும் காணப்பட்டன. அருகிவரும் உயிரினமாக கருதப்பட்டதால் ஆசிய சிங்கங்கள் சிவப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதுகாக்கப்பட்ட காட்டிற்குள் அவை சுதந்திரமாக சுற்றி வரும்படி கிர் வனவிலங்கு சரணாலயம் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக சிங்கங்கள் திடீர் உடல்நலக்குறைவால் சுருண்டு சுருண்டு விழுவதை வனக்காவலர்கள் பார்த்துள்ளனர். அவற்றில் ஒருசில சிங்கங்கள் உயிரிழக்க ஆரம்பித்ததும் அனைவரையும் கவலை தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது.

செப்டம்பர் 12-ந் தேதி முதலாவது உயிரிழப்பு நடக்க, அடுத்தடுத்த நாட்களில் சிங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உயிரிழந்தன. இதுவரை 23 சிங்கங்கள் அகால மரணம் அடைந்ததால் ஒட்டுமொத்த வனவிலங்கு ஆர்வலர்களும் பதற்றத்திற்கு உள்ளானார்கள். உச்சநீதிமன்றமும் தலையிட்டு கிர் காட்டில் நடப்பது என்ன? ஏன் சிங்கங்கள் உயிரிழக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியது.

உடல்நலிவுற்ற சிங்கங்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உயிரிழந்த சிங்கங்களுக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்ற நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமல்லாது பேபிஸோஸிஸ் வைரசும் சிங்கங்களை தாக்கி இருப்பதும் தெரிய வந்தது. உயிரிழந்த 23 சிங்கங்களில் 4 சிங்கங்கள் கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தொற்றினாலும்,17 சிங்கங்கள் பேபிஸோஸிஸ் தொற்றினாலும் உயிரிழந்ததை இந்திய மருத்துவ கவுன்சில் உறுதி செய்தது.

சிங்கங்கள் உயிரிழப்புக்குக் காரணமான கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்றால் என்ன? என்று அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த வைரசானது நாய்களின் குடல், மூச்சுக்குழல் மற்றும் மத்திய நரம்பு அமைப்பினை பாதிக்கும் ஒன்றாகும். நாய்களிடம் இருந்து பரவும் இந்த வைரஸ் சிங்கங்களையும் தாக்குகிறது. பேபிஸோஸிஸ் என்றால் ஒட்டுண்ணிகள் மூலம் சிவப்பு இரத்த அணுக்களை பாதிக்கும் வைரஸ் ஆகும்.

குறைந்த எண்ணிக்கையில் ஆசிய சிங்கங்கள் கிர் வனப்பகுதியில் இருப்பதால், அக்கூட்டத்திற்குள்ளே இனப்பெருக்கம் நடைபெறுகிறது. இதனால் மரபணு வலுவிழந்துவிடும். அதன் விளைவாக,நோய் எதிர்ப்பு சக்தியும்,சுற்றுச்சூழல் மாற்றத்தை எதிர்கொள்ளும் தன்மையும் குறைந்து விடுகிறது. இவையும் இறப்பிற்க்கு காரணமாக உள்ளது.

இந்தியாவில் சிறுத்தை புலிகள் அழிந்து விட்ட நிலையில்,ஆசிய சிங்கங்களின் இந்த நிலை கவலை அழிப்பதாக உள்ளது. ஆசிய கண்டம் மட்டும் இல்லாமல் உலகிலேயே, இந்தியாவில் உள்ள கிர் வனப்பகுதியில் மட்டும் தான் ஆசிய சிங்கங்கள் வாழ்கிறது என்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறது. எனவே ஆசிய சிங்கங்களை பாதுகாக்க வேண்டியது அரசின் பெருங்கடமைகளில் ஒன்றாகும்.

பிடரி சிலிர்த்து, நிலத்தை அறைந்து, கோரைப்பற்கள் வெளித்தெரிய கர்ஜிக்கும் ஆசிய சிங்கங்களின் கர்ஜனை இன்று அவலக் குரலாகவே ஒலிக்கிறது. அவற்றை பேணி பாதுகாக்கும் பெரும்பணி நமக்குள்ளது.

Exit mobile version