கொல்கத்தாவில் உள்ள பிரசித்தி பெற்ற பக்ரி மார்க்கெட் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் பிரசித்தி பெற்ற பக்ரி சந்தையில் நள்ளிரவு இரண்டரை மணியளவில் தீப்பிடித்தது. இந்த தீ அடுத்த சில நிமிடங்களில் அனைத்து கடைகளுக்கும் பரவி மிகப்பெரிய தீ விபத்தாக மாறியது.
நடைபாதையில் ஏற்பட்ட சிறு தீ, கடைகளில் பரவியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும் சிலர் குறிப்பிட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தீவிபத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
தீவிபத்தை அடுத்து, அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த தீவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.