காமரூபத்தில் இருந்து ஒரு நீதிதேவன்…

இந்திய பறவையின் தனித்து விடப்பட்ட சிறகென தூரத்தில் விழுந்து கிடக்கிறது வடகிழக்கு மாநிலங்கள். அதில் ஒன்று காமரூபம் என அன்றைய தினம் அழைக்கப்பட்டது, இப்போது அது அஸ்ஸாம். இந்திய எல்லைக்கோட்டை தீர்மானிக்கும் அந்த மாநிலத்தில் இருந்து தான் நியாயத்தின் நீள்கோட்டை எழுதும் நீதிபரிபாலனத்தின் உச்ச இடமான உச்சநீதிமன்றத்தில் வந்து அமர்கிறார் ரஞ்சன் கோகாய்.

1954-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதி அஸ்ஸாம் மாநிலத்தின் தேநீர் நகரம் என்று அழைக்கப்படும் திப்ரூகர் நகரில் பிறந்தவர் ரஞ்சன் கோகாய். அஸ்ஸாம் மாநில முதலமைச்சராக இருந்த கேசாப் சந்திர கோகாய்-க்கு பிறந்த இவர் தமது பள்ளிப்படிப்பை திப்ரூகரின் டான் பாஸ்கோவிலும், டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட புனித ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் முதுகலை படிப்பையும் முடித்தார்.

1978-ம் ஆண்டு கௌஹாத்தி நீதிமன்றத்தில் வழக்கறிராக பணியை துவக்கிய அவர், அரசியல் சாசனம் – வரி சிக்கல்கள் – கம்பெனி விவகாரங்கள் போன்ற துறைகளில் துவக்கத்தில் ஆர்வம் காட்டினார். இதன்பின்னர் 2001-ம் ஆண்டு கௌஹாத்தி நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வடகிழக்கின் 7 மாநிலங்களுக்கு அவர் ஒருவரே நீதிபதியாக இக்காலகட்டத்தில் அவர் பணியாற்றினார். 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு பஞ்சாப் – ஹரியானா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். குறுகிய காலத்திலேயே 2012-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளில் ஒருவராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார் ரஞ்சன் கோகாய். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதலாவது நபர் இவராவார். ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் 13 மாதங்கள் ஆகும். நாளை (3/10/18) முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 18-ந் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் செயலாற்றுவார்.

விடைபெற்று செல்லும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை பாரபட்சமாக ஒதுக்கீடு செய்கிறார் என்று போர்க்கொடி உயர்த்திய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று கேரளாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சௌமியா வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு அளித்தது, வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை வழக்கில் கெடு விதித்தது போன்ற வழக்குகளில் ரஞ்சன் கோகாய் வழங்கிய தீர்ப்பு சர்ச்சைகளை உண்டாக்கியது.

மத்திய அரசு – நீதிமன்றம் இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில் உரிமைகளை பேசும் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாற்காலியில் அமர்வது காலத்தின் கட்டாயம் என்றே சொல்லலாம். எதிர்வரும் ஒரு வருடத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் வழங்க போகும் தீர்ப்புகள் இந்திய ஜனநாயகத்தின் மாண்பை போற்ற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

 

Exit mobile version