காந்திக்குத் தங்கப்பதக்கம்! – அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!!

சமாதானம் மற்றும் அகிம்சையைப் போதித்தமைக்காக மகாத்மா காந்திக்கு தங்கப்பதக்கம் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் 6 எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

உலகின் மிகச்சிறந்த சமாதான தூதர்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தால், தங்கப்பதக்கம் வழங்கிக் கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில், காந்தி உயிரோடு இல்லாத நிலையில், இந்த தங்கப் பதக்கத்தை காந்திக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, தற்போது அமெரிக்காவில் வலுப்பெற்று வருகிறது.

மேலும், மகாத்மா காந்தியின் அகிம்சையையும், சமாதானத்தையும் அங்கீகரித்துக் கவுரவிக்கிற வகையில், நாடாளுமன்ற தங்கப்பதக்கம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் 6 எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்தத் தீர்மானத்தை நியூயார்க் பெண் எம்.பி. கரோலின் மலோனி, இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் அமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, பிரமிளா ஜெயபால், துளசி கப்பார்டு ஆகியோர் கொண்டு வந்துள்ளனர்.

காந்தியின் பிறந்த தினம், சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுவதையொட்டி ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தியின் அகிம்சை தத்துவத்தை உலகம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, காந்திக்குத் தங்கப்பதக்கம் வழங்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் 6 எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். இந்த தங்கப் பதக்கத்தை ஏற்கனவே அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால், தலாய்லாமா உள்ளிட்டவர்கள் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version