உலக துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்

 

52-வது உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.

12-வது நாளான நேற்று நடந்த ஜூனியர் ஆண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் 16 வயதான இந்திய வீரர் உதய்வீர் சித்து 587 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அமெரிக்க வீரர் ஹென்றி லிவெரெட் 584 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தையும், தென்கொரியா வீரர் லீ ஜாக்யோன் 582 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர். இந்த பந்தயத்தில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் விஜய்வீர் சித்து 581 புள்ளிகளுடன் 4-வது இடமும், ராஜ்கன்வார் சிங் சந்து 568 புள்ளிகளுடன் 20-வது இடமும் பிடித்தனர்.

இதேபோல், 25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் அணிகள் பிரிவில் உதய்வீர் சித்து, விஜய்வீர் சித்து, ராஜ்கன்வார் சிங் சந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,736 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 1,730 புள்ளிகளுடன் சீனா அணி வெள்ளிப்பதக்கமும், 1,721 புள்ளிகளுடன் தென்கொரியா அணி வெண்கலப்பதக்கமும் வென்றன.

இந்த போட்டி தொடரில் இதுவரை இந்தியா 9 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கம் வென்று 4-வது இடத்தில் உள்ளது. சீனா 39 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. தென்கொரியா 32 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், ரஷ்யா 24 பதக்கங்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.

Exit mobile version