உத்திரபிரதேசத்தில் ஹீரோவாக சித்தரிக்கப்படும் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி.

உத்தரபிரதேசத்தில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்.

தமிழில் சூர்யா நடித்து, ஹரி இயக்கிய, சிங்கம் திரைப்படம் இந்தியிலும் எடுக்கப்பட்டு அமோக வசூலை குவித்தது.அப்படத்தில் போலீஸ் வேடத்தில் மிடுக்கு காட்டியிருப்பார் நடிகர் அஜய் தேவ்கன். இந்த நிலையில் சிங்கம் பட போஸ்டரில் அஜய் தேவ்கனுக்கு பதிலாக தமிழக போலீஸ் அதிகாரி ஒருவரை வைத்து பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அந்த அதிகாரியின் நடவடிக்கைகளை ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ளியுள்ளன அவ்வூர் பத்திரிகைகள். சரி … வாருங்கள் . விசயத்துக்கு வருவோம்.

உத்தரபிரதேச மாநிலம், பரேலியில் கடந்த வெள்ளிக்கிழமை முகரமை ஒட்டி முஸ்லிம்கள் ஊர்வலம் நடைபெற்றது.

கடந்த பத்து வருட வரலாற்றை புரட்டிப்பார்த்தால் , இந்த ஊர்வலம் ,அந்த ஊரில் கலவரத்தில் முடியாத வருடமே இல்லை என்கிற அளவுக்கு சென்சிட்டிவ் நிகழ்ச்சி அது. இந்த முறையும் ஊர்வலம் தொடங்கியவுடன் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

ஆம். இந்த ஊர்வலமானது பித்ரி செயின்பூரின் முக்கிய பாதையில் செல்ல இருந்த போது , பாஜக எம்எல்ஏவான பப்பு பர்தோல் என்கிற ராஜேஷ் மிஸ்ரா ஊர்வலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் ஊர்வலத்தை தடுத்து ஏராளமான தடுப்புகளை எம்.எல்.ஏ ஆட்கள் வைத்திருந்தனர். அந்த தடுப்புகளை எடுக்க போலீசார் முயற்சி செய்த போது அவர்களை எம்.எல்.ஏ ஆட்கள் சிறைப்பிடித்துக்கொண்டனர். பரேலியின் நகர போலீஸ் எஸ்பி, ஏஎஸ்பி உள்ளிட்ட 20 போலீஸார், பப்புவின் ஆட்களால் சுற்றிவளைக்கப்பட்டனர்.

அதேசமயம், அருகிலுள்ள பகுதியில் மசூதி எரிக்கப்பட்டதாக கிளம்பிய வதந்தி கிளம்பியது. இதை நம்பி சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் திரண்டனர்.

மிகவும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் அடுத்து என்ன நடக்குமோ என அனைவரும் திகிலில் உறைந்திருந்த நிலையில் தான், அங்கு தனது படைகளுடன் வந்து சேர்ந்தார் பரேலி மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளரான முனிராஜ்.

எந்த பதட்டமும் கொள்ளாத முனிராஜ், இஸ்லாமியர்களுடன் பேசி, மசூதி எரிக்கப்பட்டதாக வந்த தகவல் வதந்தி என புரிய வைத்தார். அது மட்டுமில்லாமல் அவர்களிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி ஊர்வலத்தின் பாதையை மாற்றி அமைத்தார். அதே நேரம் எம். எல்.ஏ வின் ஆட்களை சுற்றி வளைத்திருந்தார் முனிராஜ். இதனால் அவர்களால் மேற்கொண்டு எங்கும் நகர முடியவில்லை.

இதனால் கடந்த 10 வருடமாக நடந்து வந்த கலவரத்தை இந்த வருடம் தடுத்தி நிறுத்தினார் முனிராஜ் ஐ.பி.எஸ்.. இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ பப்பு, அவரது மகன் விக்கி பர்தோல், அவர்களது ஆதரவாளர்கள் என 15 பேர் மீதும், ஆயுதங்களுடன் திரண்ட முஸ்லிம்களில் 27 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பரேலியில் மதக்கலவரத்தை தடுத்து நிறுத்தியதற்காகத்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனிராஜ், ஐ.பி.எஸ். அதிகாரியை ‘சிங்கம்’ எனக் கூறிப் பாராட்டுகள் குவிகின்றன.
அஜய் தேவ்கனுக்கு பதிலாக முனிராஜின் புகைப்படத்துடனான பதிவுகள் உ.பி.வாசிகளின் வாட்ஸ்-அப்களிலும் வைரலாகி வருகின்றன.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியின் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் தான் இந்த முனிராஜ் ஐ.பி.எஸ். அவர் ஆளும் கட்சியினர், அவர்கள் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது முதன் முறையல்ல. இதற்கு முன்பு புலந்த்ஷெஹர் மாவட்ட எஸ்எஸ்பியாக இருந்த போது, பாஜக, பஜ்ரங்தளம் மற்றும் முதலமைச்சர், யோகி துவக்கிய இந்து யுவ வாஹிணி ஆகியவற்றின் மீதும் பல்வேறு காரணங்களுக்காக வழக்குப் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Exit mobile version