ஈரானில் சிக்கித் தவிக்கும்  தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

 

ஈரானில் சிக்கித் தவித்து வரும் தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீன்பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மீனவரும், ஈரான் கடற்படையினரால், எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.

கிஷ் தீவில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படுவதில்லை என்று தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வாதாரத்துக்காக துபாய் சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த தமிழக மீனவர்களின் விசா காலம் முடிவடைவதற்குள், அவர்களை மீட்டு உடனடியாக தாயகம் அழைத்து வர ஈரானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version