ஆதார் அட்டை – இந்திய மக்களுக்கு ஆதாரமா? சேதாரமா? 

ஒரு இந்திய குடிமகனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒற்றை அட்டையில் கொண்டுவரும் திட்டம் தான் ஆதார். முதலில் தனித்துவ அடையாள அட்டை என்று நந்தன் நிலகேனியால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, நாள் செல்ல செல்ல மத்திய அரசின் சலுகைகளை பெறுவதற்கான கடவுச்சீட்டாக மாற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வங்கி கணக்குகள், கைபேசி எண்ணுடன் ஆதார் அட்டையை இணைத்தல் என ஒரு சங்கிலித் தொடராக ஆதார் அட்டை உருவெடுக்க ஆரம்பித்தது. 
 
சாதாரண அடையாள அட்டையாக ஆரம்பிக்கப்பட்டு ஒரு தனி மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கை சரடையும் ஆராயும் கண்தெரியாத உளவாளியாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறதோ என்ற ஒரு அச்சத்தை ஆதார் ஏற்படுத்த தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆதார் அட்டைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் தனிநபர்கள் பலராலும், தன்னார்வ அமைப்புகள் பலவற்றாலும் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையில் அமைக்கப்பட்ட 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பாக 2 ஆண்டுகள் விசாரணையை கடந்து தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் இறுதி தீர்ப்பை எட்டும் நிலையில் உள்ளது. 
 
நாட்டில் உள்ள ஒட்டுமொத்த குடிமக்களின் கைரேகைகளை திரட்டி மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்ற கேள்விக்கு இன்றைய தினம் விடை கிடைத்து விடும். ஆதார் இந்திய மக்களுக்கு ஆதாரமா? சேதாரமா?… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கையெழுத்தில் அடங்கி உள்ளது, இந்த வழக்கின் தலையெழுத்து.
Exit mobile version