அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன ஜெர்மி லால்ரினுகா 62 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அர்ஜென்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் 16 வயதே ஆன ஜெர்மி லால்ரினுகா 62 கிலோ பளுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அர்ஜென்டின தலைநகர் பியூனேஸ் அர்சில் உலக இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயதான இளம்வீரர் ஜெர்மி லால்ரினுகா பங்கேற்றார். 62 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட அவர், ஒட்டுமொத்தமாக 274 கிலோ பளு தூக்கி தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார். 2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 67 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம் என்று ஜெர்மி லால்ரினுகா கூறியுள்ளார். இயற்கையிலேயே பளுதூக்கும் உடல்வாகும், முறையான பயிற்சியுமே ஜெர்மி லால்ரினுகா தங்கப்பதக்கம் வெல்ல காரணம் என்று தேசிய பயிற்சியாளர் விஜய் ஷர்மா தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் பிரிவில் 273 கிலோ எடையை தூக்கி ஜெர்மி லால்ரினுகா சாதனை படைத்து இருந்தார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் ஏற்கனவே தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார். இந்த இரண்டு தங்கப் பதக்கங்கள் மூலம் உலக இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கப் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Exit mobile version