அகவீணையின் அதிர்வுகள் – நான்காம் சுவர் தொடர் குறித்து…

எழுத்தாளர் பாக்கியம் சங்கர் ஆனந்த விகடன் வார இதழில் எழுதி வரும் தொடர் நான்காம் சுவர். 6 வாரங்களை கடந்துள்ள இத்தொடர் எழுப்பியுள்ள அக அதிர்வுகள் ஏராளம்.

கசங்கிய இருளை எடுத்து நீவி, தூசி தட்டி, வெளிச்ச பரப்பில் எழுத்து விருந்து படைக்கிறார் பாக்கியம் சங்கர்.

உலகில் இதுவரை எழுதப்பட்ட கதைகளின் பொதுவான களம் என்பது உணர்வுகளின் மோதல், உள்ளங்களின் தேடல், ஆனால் சடலங்களில் இருந்து எழுந்து வருகிறது பாக்கியம் சங்கரின் எழுத்துக்கள்.

உயிரற்றவை என்பதால் கனமாகவும், அச்சுறுத்தும்படியாகவும் இருக்கிறது. என்ன செய்வது, அதில் உண்மை இருக்கிறதே. தவிர்க்க முடியவில்லை, தவறவிட முடியவில்லை.

நீங்கள் காண மறுக்கும் உலகம், யோசிக்க தவறிய உலகம், பாதாள உலகின் பாதங்களில் உறைந்து கிடக்கும் ஆன்மாக்களை தட்டி எழுப்புகிறார் பாக்கியம் சங்கர்.

மணவறை மோதல்களை எழுதி காசு பார்க்கும் வெகுஜன எழுத்துக்களுக்கு மத்தியில், பிணவறை உலகின் நிச்சலனத்தை ஏந்தி வருகிறார்.

சாமான்யனில் இருந்து எழுந்து வந்த சாகசக்காரன் இந்த வடசென்னைக்காரன். இதுவா எழுத்து என்று முகம் சுளிப்பவரா நீங்கள், மன்னிக்கவும் நீங்கள் தவறவிட்ட பொக்கிஷத்தின் பொருளறியாதவர்.

திருப்பால், சகாயம் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் வழியே இவர் காட்டக்கூடிய உலகம் அவர்கள் வெட்டியெடுத்து விஸ்ராவில் போடும் ஈரக்குலையை போல் நடுக்கத்தை தருகிறது.

அசையாத வேரின் மேலே அசையக்கூடிய இலைகள் போலே, நம் கவனமாக தவிர்த்து செல்லும் அசையாத உணர்வுகளை அசைத்து பார்க்க வைக்கிறது பாக்கியம் சங்கரின் எழுத்தும், படைப்பும். பொதுவாக தலம் என்ற சொல்லை, புனித தன்மையுடன் அணுகுகிறோம், இதில் பாக்கியம் சங்கர் பிணவறையை பல இடங்களில் தலம் என்றே எழுதுகிறார்.

சிந்தித்து பார்த்தால் இது புதுவகை எழுத்து சீர்திருத்தம் என்றே சொல்லலாம். வாழும் காலத்தின் சடங்குகள் அனைத்தும் நமக்கு அத்துப்படி, கைப்பிடி காற்று வெளியேறி கைக்காசு பெறாத உடலுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் எத்தனை என்பது இன்றுதான் தெரிந்து கொள்கிறோம், நான்காம் சுவரின் வழியே.

 

இந்த தொடரின் ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வாக்கியமும் திருப்பால் கையில் வைத்திருக்கும் டூடொண்டி பிளேடின் கூர்மை போல் மினுமினுக்கிறது.

தமிழுக்கு புதிய சொற்களை, புதிய பொருளை போகிற போக்கில் கொட்டி விட்டு போகிறார். தேடி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு மட்டும் நம்முடையது.

நட்பை எடுத்துரைக்க எத்தனை எத்தனை வார்த்தைகளை கோர்த்து தோரணம் கட்டினாலும், ஒற்றைச்சொல்லில் ‘சிநேதா’ என்று நம்மை அசர வைக்கிறார். உடல் என்ற பதத்தை ‘பொட்டலம்’ என்று சட்டென்று உருவகப்படுத்தி நாம் யார்? நாம் வாழ்கின்ற வாழ்க்கையின் பொருள்தான் என்ன? என்று மண்டைக்குள் வண்டை அனுப்பி குடைகிறார்.

மறுகணம் அதே பொட்டலம், பிள்ளையின் உடலாக வரும்போது “நா பெத்த கனிய அறுத்துடாதீங்க” என்று வாழ்வின் மென்மையான பகுதியை வருடிச் செல்கிறது.

கொன்றை மரங்களின் இலைகளும், பூக்களும் உதிரும் பரப்பு பாக்கியம் சங்கரின் நிலம், மிதிபடும் சருகின் ஒலியை உற்றுநோக்கி உருப்பெருக்கி காட்டுகிற நுட்பம் அவருக்கு வாய்த்திருக்கிறது. நுண்மைகளின் கல்லெடுத்து கட்டப்படுகிறது நான்காம் சுவர்.

Exit mobile version